குழித்துறை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்

குழித்துறை அருகே சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரே‌ஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update:2018-08-14 04:15 IST
களியக்காவிளை,

குமரி மாவட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும்படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று, வாகன சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள். ஆனாலும், கடத்தல்காரர்கள் அரசு பஸ், சொகுசு கார் மூலம் கடத்தலில் ஈடுபட்டுவருகிறார்கள்.

மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன் மற்றும் வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று அதிகாலையில் குழித்துறை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்தவழியாக கேரள பதிவெண் கொண்ட சொகுசுகார் வேகமாக வந்தது. அந்த காரை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால், அது நிற்காமல் வேகமாக கேரளாவை நோக்கி சென்றது. இதனால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை விரட்டி சென்றனர்.

குழித்துறை அருகே எல்லை பகுதியான படந்தாலுமூட்டில் சென்ற போது, அங்கு சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசாரின் உதவியுடன் காரை மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து காரை சோதனையிட்ட போது அதில் சிறு– சிறு மூடைகளில் 700 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது. இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து கார் மற்றும் அரிசியை பறிமுதல் செய்தனர். அரிசியை காப்புகாடு குடோனிலும், காரை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

 மேலும், காரில் இருந்த டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்