நாட்டின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பு அபாரமானது - தேவேகவுடா பேச்சு

நாட்டின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பு அபாரமானது என்று தேவேகவுடா கூறினார்.

Update: 2018-08-12 23:45 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் ஒரு புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஜனதா தளம்(எஸ்) தேசிய தலைவர் தேவேகவுடா கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:-

இந்தியாவில் ஜனநாயகத்தை காக்க ஒரு வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தியவர் ஜவஹர்லால் நேரு. சமீபகாலமாக நேருவை விமர்சித்து பேசுவதை நாடாளுமன்றத்தில் நான் பார்க்கிறேன். இது எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது. நாட்டின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பு அபாரமானது. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த காங்கிரஸ் கட்சி பலம் குறைந்து வந்ததால், மாநில கட்சிகள் பலம் பெற்றன.

அக்கட்சி தென்இந்தியாவில் தலைவர்களை அடையாளம் காணவில்லை. உத்தரபிரதேசத்தில் இந்தி மொழி பயன்பாட்டில் உள்ளது. அங்கு சக்தி வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால் அந்த மாநிலத்திற்கு அரசுகள் முக்கியத்துவம் வழங்குகின்றன. நானும் அடிப்படையில் காங்கிரஸ்காரன் தான். அரசியல் பல வேதனைகளை அனுபவித்து இருக்கிறேன். அவற்றையெல்லாம் சொல்ல முடியாது.

நான் அரசியலில் நீண்ட நெடிய போராட்டத்தை சந்தித்து இருக்கிறேன். நான் சட்டசபையில் கேள்வி எழுப்பினால், சிலர் வெளியே சென்றுவிடுவார்கள். முதல்-மந்திரியாக இருந்த தேவராஜ் அர்ஸ் புள்ளி விவரங்களுடன் பதில் சொல்வார். சட்டசபை தேர்தலில் நான் தோல்வி அடைந்ததால், நாடாளுமன்றத்திற்கு சென்றேன்.

நாடாளுமன்றத்தில் கன்னடம் பேசுமாறு பலர் என்னிடம் கூறினர். ஆனால் அப்போதைய சபாநாயகர், ஆங்கிலத்தில் பேசும்படி என்னிடம் கூறினார். ஆயினும் நான் கன்னடத்தில் பேசி, பிறகு ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசினேன். நான் எந்த விஷயத்தை பேசினாலும், அதற்கு முன்பு உரிய விவரங்களை சேகரித்துக் கொள்வேன்.

இதன் மூலம் எனது திறமையை வளர்த்துக் கொண்டேன். இதன் மூலம் சபையின் கவனத்தை ஈர்த்தேன். அதன் பிறகு திடீரென பிரதமரானேன். 10 மாதங்கள் 21 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தேன். எனது பதவி காலத்தில் டெல்லியை சேர்ந்தவர்கள் என் மீது ஒரு கரும்புள்ளியை கூட காட்ட முடியவில்லை. காஷ்மீர் பிரச்சினையை கூட எளிதாக கையாண்டேன். நான் இதுவரை 15 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன்.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்