ஓய்வூதியர்களுக்கு ரூ. 3 லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற அலுவலர்கள் கூட்டத்தில் தீர்மானம்

தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என விருதுநகர் ஓய்வு பெற்ற அலுவலர்கள் பேரவைகூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-08-12 23:00 GMT

விருதுநகர்,

விருதுநகர் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டத்தின் 19–வது ஆண்டு விழா மற்றும் பேரவை கூட்டம் விருதுநகர் அனுமான் திருமண அரங்கில் நடைபெற்றது. சங்க தலைவர் போஸ் தலைமையிலும் மாவட்ட தலைவர் ராமராஜ் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் 19–வது ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டது. சங்க செயலாளர் நாகராஜன் மற்றும் பொருளாளர் ராஜகோபால் ஆகியோர் செயல் மற்றும் வரவு செலவு அறிக்கைகளை தாஅக்கல் செய்தனர். கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விருதுநகரில் மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும். ஓய்வூதியர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது 50 சதவீதம் கட்டண சலுகை வழங்க வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கும் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் இறக்கும் சமையத்தில் இருதிச்சடங்கிற்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். 1–1–2016 முதல் 30–9–2017 முடிய 21 மாத ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். 1–1–2016 முதல் மருத்துவப்படி ரூ.ஆயிரம் வழங்க வேண்டும். ஏ. மற்றும் பி பிரிவு ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.500 வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்குவதை போல குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல் படுத்த வேண்டும். 75 வயதை கடந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 15 சதவீத அடிப்படை ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

மேல்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு வந்திருந்தோரை சங்க இணை செயலாளர் குருசாமி வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்