திருப்பூர் பகுதியில், முறைகேடாக இயங்கிய 12 பிரிண்டிங் நிறுவனங்கள், 2 சாய ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர் பகுதியில் முறைகேடாக இயங்கிய 12 பிரிண்டிங் நிறுவனங்கள் மற்றும் 2 சாய ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.;

Update: 2018-08-12 23:00 GMT
திருப்பூர்,

திருப்பூரில் பின்னலாடை தயாரிப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனால் பலரும் இந்த தொழிலை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக திருப்பூரில் திரும்பும் திசையெங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் சாய, சலவை ஆலைகள், பிரிண்டிங் நிறுவனங்களாக காட்சியளிக்கும்.

நிறுவனங்களிலும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். ஆடை தயாரிப்பும் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கும். இதில் சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத்தான் இயங்க வேண்டும்.

ஆனால் திருப்பூரில் முறைகேடாகவும், அனுமதி பெறாமலும் இயங்கி வரும் சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் கழிவுநீரை நிலங்களிலும், நீர்நிலைகளிலும் திறந்து விட்டு விடுகின்றன. இதன் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த நிறுவனங்களை கண்டுபிடித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு மங்கலம்-பல்லடம் ரோட்டில் இயங்கி வரும் ஒரு பிரிண்டிங் நிறுவனம் கழிவுநீரை முறைகேடாக வெளியேற்றி வருவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது. அதன் பேரில் அதிகாரிகள் அந்த பிரிண்டிங் நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த பிரிண்டிங் நிறுவனம் பிரிண்டிங் கழிவுநீரை முறைகேடாக வெளியேற்றியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பப்பீஸ் என்ற அந்த பிரிண்டிங் நிறுவனத்தின் மின் இணைப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதுபோல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வடக்கு பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது மேலும், 11 பிரிண்டிங் நிறுவனங்கள் முறைகேடாக பிரிண்டிங் கழிவுநீரை நிலங்களிலும், நீர்நிலைகளிலும் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பப்பீஸ் பிரிண்டிங் நிறுவனம் உள்பட 12 பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டித்து உடனே நடவடிக்கை எடுத்தனர்.

இதற்கிடையே முருகம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சாய ஆலைகள் சில சாயக்கழிவுநீரை சுத்திகரிப்புக்கு அனுப்பாமல் முறைகேடாக நொய்யல் ஆற்றில் வெளியேற்றி வருவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கும் ஆய்வு செய்தனர்.

அப்போது பீனிக்ஸ் டையிங், மீரா பிராசஸ் ஆகிய சாய ஆலைகள் சாயக்கழிவுநீரை சுத்திகரிப்புக்கு அனுப்பாமல், நொய்யல் ஆற்றில் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த 2 சாய ஆலைகளின் மின் இணைப்பையும் துண்டித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்