கோவில்களில் சாமக்கொடை நடத்த தடை நீங்கியது - போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் கோவில்களில் சாமக்கொடை நடத்த போலீஸ் தடையை நீக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவிட்டுள்ளாா்.;

Update: 2018-08-11 22:45 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் இந்து கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன. மேலும் கிராம கோவில்களில் இரவு நேரங்களில் சாமக்கொடை நடத்துவதற்கும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதுதவிர கோவில் விழாக்களின் போது போலீஸ் பாதுகாப்புக்கு கருவூலத்தில் பணம் கட்டுமாறும் தெரிவிக்கப்பட்டது.

இது வழிபாடு நடத்துவோருக்கும், கொடை விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்துவரும் கோவில் நிர்வாகிகளுக்கும் சிரமங்களை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் கோவில் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சாமக்கொடைகளுக்கு போலீசார் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், கோவில்களில் சாமக்கொடை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதாவது சாமக்கொடை நடத்துவதற்கு எந்தவித தடையும் கிடையாது.

அப்போது கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளுக்கு பதிலாக, ‘பாக்ஸ்’ ஒலி பெருக்கிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்துள்ள ஒலி அளவுக்குள் இருக்க வேண்டும். கண்டிப்பாக போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுவோர் மட்டும் கருவூலத்தில் பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் கூறிஇருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் சாமக்கொடை நடத்த இடையூறு, கெடுபிடிகள், கோவில் திருவிழா போலீஸ் பாதுகாப்புக்கு பணம் வசூலித்தல், பாரபட்சமாக ஒலிபெருக்கி அகற்றம் பிரச்சினை தொடர்பாக நெல்லை மாவட்ட போலீசாரை கண்டித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வள்ளியூரில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், கோவில்களில் பாக்ஸ் வடிவ ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு சாமக்கொடை நடத்த தடைஇல்லை எனவும், ஆடல், பாடல் நிகழ்ச்சி போன்ற தனியார் நிகழ்ச்சி போலீஸ் பாதுகாப்புக்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்றும் வழக்கமான பூஜைகளுக்கான பாதுகாப்புக்கு பணம் செலுத்த தேவையில்லை என்றும் அறிவித்து உள்ளார். எனவே வள்ளியூரில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

மேலும் செய்திகள்