தி.மு.க. நிர்வாகிகள் மொட்டை அடித்து அஞ்சலி

கோவை உடையாம்பாளையத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. தி.மு.க. நிர்வாகிகள் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Update: 2018-08-08 22:00 GMT
கோவை, 


தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து கோவையில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கோவை மாநகர 66-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான உடையாம்பாளையத்தில் அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.
இதற்கு உடையாம்பாளையம் தி.மு.க. வட்ட செயலாளர் சேரலாதன் தலைமை தாங்கினார். மகளிர் அணியை சேர்ந்த கீதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின்போது கருணாநிதியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்தை எடுத்துக்கொண்டு அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

உடையாம்பாளையத்தில் தொடங்கிய ஊர்வலம் தொட்டச்சியம்மன் கோவில் வீதி, அசோக் வீதி, எம்.ஜி.ஆர். நகர், காந்திநகர், கவுண்டர் வீதி, நேதாஜி மெயின் ரோடு வழியாக மாரியம்மன் கோவில் திடலுக்கு வந்தது. பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு ஊர்வலத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நிர்வாகிகள், கருணாநிதி அடித்தட்டு மக்களுக்காக கொண்டு வந்த சட்டங்களால்தான் தற்போது மக்கள் அனைவரும் சுயமரியாதையோடு வாழ்கிறார்கள். மேலும் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்தது, அவருக்கு இருந்த ஆளுமை தன்மை, சிலேடை பேச்சுகளை எதிர்கட்சியினராக இருந்தபோதிலும் ரசித்ததாக தெரிவித்தனர்.

இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த புரட்சி தம்பி, பழனிசாமி, காங்கிரஸ் ஜெகநாதன், தே.மு.தி.க. சார்பில் பாண்டியன், கம்யூனிஸ்டு கட்சி சண்முக சுந்தரம், அ.ம.மு.க. பாபு மற்றும் ம.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், உடையாம்பாளையம் பகுதி பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு பகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளான சிற்றரசு, நாகராஜ் ஆகிய 2 பேரும் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினார்கள். அதுபோன்று கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தி.மு.க. போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த கருப்புசாமி உள்பட 3 பேர் மொட்டை அடித்தனர். பின்னர் அவர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
கோவை மாநகர பகுதியில் பல இடங்களில் கருணாநிதி மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. மனிதநேய ஜனநாயக கட்சியினர் உக்கடத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். 

மேலும் செய்திகள்