குழாயில் கிடந்த பெண்ணின் உடல் மீட்பு: கொலை செய்ததாக கணவர் கைது நடத்தையில் சந்தேகப்பட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்

கால்வாய் அருகே கிடந்த குழாயில் பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரத்தில் அவரை கொலை செய்ததாக கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-05 22:15 GMT

சிவமொக்கா,

கால்வாய் அருகே கிடந்த குழாயில் பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரத்தில் அவரை கொலை செய்ததாக கணவரை போலீசார் கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததும் அம்பலமாகி உள்ளது.

பெண் உடல் மீட்பு

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா மாளூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட உப்பூர் அருகே வனப்பகுதியையொட்டி உள்ள கால்வாய் அருகே வைக்கப்பட்டிருந்த குழாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த உடலை மீட்டு விசாரித்தனர்.

விசாரணையில், அவர் ராய்ச்சூர் மாவட்டம் மான்வி தாலுகா கல்லூரை சேர்ந்த நந்தினி (வயது 20) என்பது தெரியவந்தது. அவருக்கும், அதேப்பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்ததும் தெரியவந்தது. மேலும், கடந்த மாதம் (ஜூலை) 27–ந்தேதியில் இருந்து நந்தினி மாயமானதாக மான்வி போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

கணவர் கைது

இதுதொடர்பாக மாளூர் போலீசார் நந்தினியின் கணவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர் தான் நந்தினியை கொலை செய்து உடலை கால்வாய் குழாயில் வீசிச் சென்றது தெரியவந்தது. மேலும், நந்தினியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மஞ்சுநாத் அவரை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதனை மாளூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து மஞ்சுநாத்தை கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் நந்தினியின் உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்