விடுமுறைக்கு ஊருக்கு வந்த கல்லூரி மாணவி கொலை
விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த கல்லூரி மாணவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரின் பிணத்தைப் பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
ஸ்ரீகாளஹஸ்தி,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பாக்ராபேட்டையைச் சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மகள் நாகமணி (வயது 19). இவர், கடப்பாவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். 2 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அவர், நேற்று முன்தினம் காலை அரிசி வாங்குவதற்காக கிராமம் அருகே உள்ள ரேஷன் கடைக்குச் சென்றார். அங்கு, ரேஷன் கடை மூடியிருந்ததால், அதன் அருகிலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
காலை சென்றவர் வெகுநேரம் ஆகியும் வீட்டுக்குத் திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த அவரின் தந்தை சுதாகர், மகளின் செல்போனுக்கு போன் செய்துள்ளார். அப்போது அவரின் செல்போன் ‘சுவிட்ஆப்’ எனத் தகவல் வந்தது. உடனே சுதாகர், ரேஷன் கடை பகுதிக்குச் சென்று மகளை தேடி பார்த்தார். அங்கு, நாகமணியை காணவில்லை.
அப்பகுதி மக்களிடம், நாகமணியை பார்த்தீர்களா? என சுதாகர் விசாரித்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அறையில் கட்டிலில் சுய நினைவின்றி கிடந்த மகள் நாகமணியை தட்டி எழுப்பி உள்ளார். நாகமணி, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுப் பிணமாக கிடந்ததைப் பார்த்து அவரும், மனைவி மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர்.
இதுபற்றி உறவினர்கள் பீளேர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும், பீளேர் இன்ஸ்பெக்டர் நரசிம்மமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் நாகமணியின் பிணத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பீளேர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சித்தூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது, சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. அத்துடன் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகையை பதிவு செய்தனர். பிளேர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்மமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகமணியின் தந்தை சுதாகர், தன்னுடைய மகளை உறவினர்களே திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி கொலையாளியை கைது செய்ய வேண்டும் எனப் போலீசாரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.