ரூ.20 லட்சம் கஞ்சா கடத்தல்: இலங்கையை சேர்ந்த படகு உரிமையாளர் கைது

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்திய இலங்கையை சேர்ந்த படகு உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-08-05 23:00 GMT
வேதாரண்யம்,


நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கடலோர காவல் குழும போலீஸ் துணை சூப்பிரண்டு கலிதீர்த்தானுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மும்தாஜ்பேகம், முருகவேலு மற்றும் போலீசார் பெரியகுத்தகை கிராம பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த ஒரு லோடு ஆட்டோவை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அதில் 6 மூட்டைகளில் 192 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும். இதையடுத்து லோடு ஆட்டோ டிரைவர் ரமேஷ்குமார்(வயது30) என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கடற்கரையில் காத்திருந்த இலங்கை யாழ்பாணம் மருந்தகேணி பகுதியை சேர்ந்த சக்திவேல்(44), வேதாரண்யம் பெரியகுத்தகையை சேர்ந்த மகேந்திரன்(44) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


இதில் கைதான மகேந்திரன் ஊர்காவல் படையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தப்பி ஓடிய பெரியகுத்தகையை சேர்ந்த முனீஸ்வரன் மற்றும் படகு உரிமையாளர் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த ராஜ்குமாரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று படகு உரிமையாளர் ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். வேதாரண்யம் பகுதியில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்