அந்தேரியில் பயங்கரம் வியாபாரி துப்பாக்கியால் சுடப்பட்டார் 2 பேருக்கு வலைவீச்சு

அந்தேரியில் வியாபாரியை துப்பாக்கியால் சுட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2018-08-04 23:00 GMT
மும்பை, 

அந்தேரியில் வியாபாரியை துப்பாக்கியால் சுட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

துப்பாக்கியால் சுட்டனர்

மும்பை அந்தேரி மரோல் பகுதியை சேர்ந்தவர் இஸ்லாம் வலிகான் (வயது58). வியாபாரி. இவர் அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை இவர் கட்டிட வளாகத்தில் தனது காரை நிறுத்தி கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இஸ்லாம் வலிகானை நோக்கி சரமாரியாக சுட்டார்.

இதில் குண்டு பாய்ந்து அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

போலீஸ் விசாரணை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கட்டிட காவலாளி அலறினார். சத்தம் கேட்டு ஓடி வந்த குடியிருப்புவாசிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தகவல் அறிந்த எம்.ஐ.டி.சி. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

இஸ்லாம் வலிகான் எதற்காக சுடப்பட்டார்? அவரை சுட்ட ஆசாமிகள் யார்? என்பது உடனடியாக தெரியவில்லை. போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இஸ்லாம் வலிகானை துப்பாக்கியால் சுட்ட 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்