தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் வாகனங்களின் கண்ணாடி உடைப்பு காரணம் என்ன? போலீசார் விசாரணை

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடியை உடைத்தவர்கள் யார்? இதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-04 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் பதவி காலம் இன்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. இதையொட்டி துணைவேந்தர் பாஸ்கரனுக்கு பாராட்டு விழா நேற்று முன்தினம் பிற்பகல் பல்கலைக்கழக கூடத்தில் நடைபெற்றது. விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான வேன், ஜீப் போன்ற வாகனங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இரவு நேரங்களில் நிறுத்தப்படுவது வழக்கம். அதேபோல நேற்று முன்தினமும் பல்கலைக்கழக வளாகத்தில் வேன், ஜீப் போன்றவை நிறுத்தப்பட்டு இருந்தது. இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர், 2 ஜீப் மற்றும் வேன் கண்ணாடி மீது கற்களை வீசி உடைத்துவிட்டு சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் பதிவாளர் முத்துக்குமார் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம நபர்களின் உருவம் எதுவும் பதிவாகி இருக்கிறதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்