வரதட்சணை கேட்டு கொடுமை: 3 வயது மகனுடன் பெண் தீக்குளித்து தற்கொலை கணவர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் 3 வயது மகனுடன் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-08-04 22:30 GMT
மைசூரு, 

வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் 3 வயது மகனுடன் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான கணவர் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-

வரதட்சணை கொடுமை

மைசூரு டவுன் மகாதேவாபுரா பகுதியை சேர்ந்தவர் ரோகித். இவரது மனைவி கவுரம்மா. இந்த தம்பதிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதிக்கு 3 வயதில் நிஷால் என்ற மகன் இருந்தான். இந்த நிலையில் திருமணம் ஆன சில மாதங்களில் இருந்தே ரோகித்தும், அவரது தாய்-தந்தையும் கவுரம்மாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் கவுரம்மா வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். அதுபோல் நேற்று முன்தினமும் கவுரம்மாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ரோகித், அவரது தாய்-தந்தை ஆகியோர் அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

தீக்குளித்து தற்கொலை

இதனால் மனம் உடைந்த கவுரம்மா, தனது உடலிலும், குழந்தை நிஷால் உடலிலும் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வித்யரண்யாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, வரதட்சணை கொடுமையால் கவுரம்மா, குழந்தையுடன் சேர்ந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து கவுரம்மா, குழந்தை நிஷால் உடல்களை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

வலைவீச்சு

இது தொடர்பாக கவுரம்மாவின் தாய் வித்யாரண்யா புரம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், கூடுதல் வரதட்சணை கேட்டு ரோகித் மற்றும் அவரது பெற்றோர், எனது மகள் கவுரம்மாவை கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் அவள், குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாள். எனவே இதற்கு காரணமாக ரோகித், அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணவர் ரோகித், அவரது தாய், தந்தை ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்