குண்டடம் அருகே நடத்தப்பட்ட சேவல் சண்டையில் கத்தி பாய்ந்து மாணவர் உள்பட 2 பேர் படுகாயம், 4 பேர் கைது
குண்டடம் அருகே நடத்தப்பட்ட சேவல் சண்டையில் கத்தி பாய்ந்து மாணவன் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்துள்ள நந்தவனம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). இவரது தோட்டத்தில் நேற்று சேவல் சண்டை நடத்தப்பட்டது. இதில் பல்லடம், தாராபுரம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சேவல் சண்டை பிரியர்கள் நூற்றுக்கணக்கானோர் சேவல்களுடன் கலந்துகொண்டனர். அப்போது, சண்டை சேவல்களின் கால்களில் கத்தி கட்டப்பட்டிருந்தன.
இந்த சண்டையை வேடிக்கை பார்க்க தாராபுரம் அருகே உள்ள அலங்கியத்தை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அப்பாஸ்(20), பல்லடம் கவுண்டம் பாளையத்தை சேர்ந்த பரமசிவம்(40) உள்பட ஏராளமானோர் வந்திருந்தனர். இந்த சேவல் சண்டையில் 2 சேவல்கள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
அப்போது ஒரு சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி கழன்று பாய்ந்து வந்தது. அந்த கத்தி பாய்ந்ததில் மாணவர் அப்பாஸ், பரமசிவம் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் மாணவன் அப்பாசுக்கு மார்பிலும், பரமசிவத்திற்கு மர்ம உறுப்பு பகுதியிலும் படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த குண்டடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதுகுறித்த புகாரின் பேரில், குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த நந்தவனம்பாளையம் விஜயகுமார், ஐயப்ப நாயக்கன்பாளையம் சின்னச்சாமி(52), நந்தவனம்பாளையம் ராஜசேகர்(33), உடுமலை பாலகிருஷ்ணமூர்த்தி(51) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 சேவல்கள், ரூ.950 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.