பனியன் நிறுவன தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது
திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மண்ணரை ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் மகேஷ்வரன்(வயது 23). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக உள்ளார். நேற்று முன்தினம் இவர் தனது நண்பர் மாரிமுத்துவுடன் சேர்ந்து ஊத்துக்குளி ரோட்டில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
மண்ணரை குமார் சைக்கிள் கடை வீதி அருகே சென்றபோது, மண்ணரை பாவடிக்கல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அஜித்(20), அவருடைய அண்ணன் பார்த்தீபன்(22) ஆகியோர் நடுரோட்டில் ஆட்டோவை நிறுத்தி பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, அவர்களிடம் வழி விடுமாறு மகேஷ்வரன் கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அஜித், பார்த்தீபன், அவர்களுடைய தந்தை குமார்(48) ஆகியோர் சேர்ந்து மகேஷ்வரன் மற்றும் மாரிமுத்துவை சாதிப்பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அஜித் இரும்பு கம்பியால் மகேஷ்வரனை தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மகேஷ்வரனை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அறிந்ததும் நேற்று காலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மகேஷ்வரனை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மேலும் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று, மகேஷ்வரனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து மகேஷ்வரன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 6 பிரிவின் கீழ் அஜித், பார்த்தீபன், குமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.