தாய்–சேய் நலன் முக்கியம்: வீட்டில் பிரசவத்துக்கு முயற்சி செய்யக்கூடாது ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தாய், சேய் நலன் கருதி வீடுகளில் பிரசவத்துக்கு முயற்சி செய்யக்கூடாது என்றும், அரசு வழங்கும் மருத்துவ சேவையை பயன்படுத்த வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Update: 2018-08-04 22:45 GMT

தேனி,

துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்போவதாக அறிவித்தார். நேற்று முன்தினம் தேனி அருகே அரண்மனைப்புதூரில் முதல் குறைகேட்பு கூட்டத்தை நடத்தினார். 2–வது நாளாக தேனி அருகே உள்ள தாடிச்சேரி, ஸ்ரீரெங்காபுரம், நாகலாபுரம், பாலகிருஷ்ணாபுரம், சங்ககோணாம்பட்டி, கோபாலபுரம், சிவலிங்கநாயக்கன்பட்டி, கொடுவிலார்பட்டி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு குறைகள், கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சிவலிங்கநாயக்கன்பட்டியில் குறைகேட்பு கூட்டம் நடத்திய போது ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு அவர்களுக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்க உள்ளேன். அரசின் விதிப்படி அரசு மருத்துவமனைகளுக்கு வந்து தான் பிரசவம் பார்க்க வேண்டும். விதிக்கு மாறாக சிலர் வீடுகளில் பிரசவத்துக்கு முயற்சி செய்வது தவறு. தாய்க்கும், சேய்க்கும் முழு பாதுகாப்பு கிடைக்க வேண்டும்.

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் தான் நலமாக இருக்கும். சிலர் படித்து இருந்தும் விதிக்கு மாறாக செயல்படும் சூழல் அரசுக்கு தெரியாமல் நடக்கிறது. அதை தடுத்து நிறுத்தும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடுகளில் பிரசவத்துக்கு முயற்சிக்கக்கூடாது. அங்கொன்றும், இங்கொன்றுமாக தான் இதுபோன்ற செயல் நடைபெறுகிறது. அது தடுத்து நிறுத்தப்படும். வருகிற காலங்களில் அது சரிசெய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்