பணியிட மாறுதலுக்கு விற்பனையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கைது

பணியிட மாறுதலுக்கு விற்பனையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-08-04 23:15 GMT

விழுப்புரம்,

திண்டிவனம் தாலுகா மயிலம் அருகே உள்ள தழுதாளி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது 40). இவர் சாரம் கிராமத்தில் இருந்த டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அந்த டாஸ்மாக் கடை இருந்ததால், அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. டாஸ்மாக் கடையை மூடக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் விளைவாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாரம் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இதையடுத்து விற்பனையாளர் ராமமூர்த்திக்கு திண்டிவனத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் பணியாற்ற டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால் ராமமூர்த்தி, கூட்டேரிப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பணிமாறுதல் வழங்கக்கோரி மாவட்ட டாஸ்மாக் மேலாளரான கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தை சேர்ந்த சிவசாமி(54) என்பவரை அனுகினார். அதற்கு அவர், ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று டாஸ்மாக் மேலாளர் சிவசாமி கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராமமூர்த்தி, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை. உறவினர்களிடம் பணத்தை வாங்கி தருகிறேன் என்று கூறிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமமூர்த்தி, இது தொடர்பாக விழுப்புரம் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை ராமமூர்த்தியிடம் கொடுத்துவிட்டு, சில ஆலோசனைகளை கூறினர்.

அதன்படி ராமமூர்த்தி, டாஸ்மாக் மேலாளர் சிவசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு, தான் ரூ.10 ஆயிரத்தை தயார் செய்து விட்டதாகவும், பணத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு டாஸ்மாக் மேலாளர் சிவசாமி, விழுப்புரம் வி.ஏ.ஓ. நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், அங்கு வந்து தன்னிடம் கொடுக்குமாறும் கூறினார்.

அதன்படி ராமமூர்த்தி நேற்று காலையில் ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, சிவசாமியின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த சிவசாமியிடம் ரூ.10 ஆயிரத்தை ராமமூர்த்தி கொடுத்தார். அந்த சமயத்தில் வீட்டின் வெளியே மறைந்திருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், ஏட்டுகள் விஜயதாஸ், பார்த்திபன், நரசிம்மராவ் ஆகியோர் கையும், களவுமாக பிடித்து சிவசாமியை கைது செய்தனர்.

இதையடுத்து சிவசாமியின் வீடு மற்றும் விழுப்புரம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கின.

பணியிட மாறுதலுக்கு விற்பனையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்கிய விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக சிவசாமி நேற்று காலையில் கைது செய்யப்பட்டார். இதுபற்றி அறிந்ததும் டாஸ்மாக் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விழுப்புரத்தில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் அருகில் டாஸ்மாக் பணியாளர்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இது குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் கூறுகையில், விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக சிவசாமி, கடந்த ஜனவரி மாதம் 20–ந் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர். இவர், 3 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் துணையுடன் டாஸ்மாக் பணியாளர்களிடம், பணியிட மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை லஞ்சம் வாங்கினார். மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு ஆய்வுக்கு வராமல் இருக்கவும், குறிப்பிட்ட தொகையை வசூலித்தார். தற்போது அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கியதால் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக கடலூர் சாவடியை சேர்ந்த முகுந்தன் என்பவர் இருந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் கட்டிடங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கு வாடகை கொடுக்க லஞ்சம் வாங்கியதால் முகுந்தனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21–ந் தேதி கைது செய்யப்பட்டார். அதன்பிறகு விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக பொறுப்பேற்ற சிவசாமி நேற்று காலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டர். தொடர்ச்சியாக 2 டாஸ்மாக் மேலாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்