விழுப்புரம் அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும் 4 வாலிபர்கள் கைது

விழுப்புரம் அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-08-04 21:45 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள ஆயந்தூரை சேர்ந்தவர் குமார் மகன் வினோத்(வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த மாதம் 15–ந் தேதி காலை சவாரிக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆ.கூடலூரை சேர்ந்த அருள்ஜோதி மனைவி வனிதாவிற்கும், வினோத்திற்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததும், இந்த விவகாரம் தெரிந்ததும் அருள்ஜோதி, தனது நண்பர்கள் உதவியுடன் வினோத்தை அருளவாடி தென்பெண்ணையாற்றுக்கு அழைத்துச்சென்றதும், அங்கு அவருக்கு மதுவாங்கி கொடுத்து கொலை செய்து உடலை தென்பெண்ணையாற்றில் புதைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அருள்ஜோதி மற்றும் அவரது நண்பரான ஆயந்தூரை சேர்ந்த சந்திரபாலன்(26) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் அருள்ஜோதியின் தம்பி ஆனந்தஜோதி(26), அருள்ஜோதியின் நண்பர்களான திருக்கோவிலூர் அருகே உள்ள தகடி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(27), அருண்பாண்டியன்(25), திருவண்ணாமலை மாவட்டம் தேனிமலையை சேர்ந்த குமரன்(21) ஆகிய 4 பேரை காணை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் அனைவரும் விழுப்புரம் கோர்டடில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்