சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கூடுதல் நல்லி வைக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவலப்பேரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கூடுதல் நல்லி வைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.;

Update: 2018-08-04 21:30 GMT
ஓட்டப்பிடாரம், 

சிவலப்பேரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கூடுதல் நல்லி வைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாடு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்- குறுக்குசாலை சாலையில் மேலமீனாட்சிபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த பகுதி வழியாக செல்லும் சீவலப்பேரி கூட்டுகுடிநீர் திட்ட குழாயின் இணைப்பு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு கிராம மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் சரிவர ஏற வில்லை என்பதால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கூடுதல் நல்லி

குடிநீர் தேவைக்காக அவர்கள் அந்த பகுதி வழியாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு செல்லும் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பில் இருந்து வெளியே வீணாக செல்லும் தண்ணீரை பிடித்து வந்தனர். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அந்த உடைப்பு ஏற்பட்ட குழாயில் 2 நல்லிகள் வைக்கப்பட்டன. அதன் மூலம் மக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர்.

தற்போது 2 நல்லிகளில் தண்ணீர் பிடிக்க அந்த பகுதி மக்கள் இரவு பகலாக காத்து கிடக்க வேண்டியது உள்ளது. அப்படியே காத்து கிடந்து தண்ணீர் பிடித்தாலும் அதிகம் பேர் பிடிக்க முடியவில்லை. எனவே அந்த பகுதி மக்கள் தங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் நல்லிகளை வைக்க வேண்டும் என்றும், மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற வில்லை என்றால், கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதில் தண்ணீரை சேகரித்து வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்