ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவர்களின் உடல்களுக்கு அமைச்சர் காமராஜ் அஞ்சலி

கொரடாச்சேரி அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவர்களின் உடல்களுக்கு அமைச்சர் காமராஜ் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Update: 2018-08-04 23:00 GMT
கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் முசிரியத்தை அடுத்த திட்டானிமுட்டம் என்ற கிராமத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவன் ரோகித் (வயது 11), அதே ஊரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் பாலாஜி (10). இவர்கள் 2 பேரும் தங்களின் வீட்டின் அருகே பாண்டவையாற்றில் குளிக்கும் போது ஆற்று நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டு இறந்தனர். 2 பேரின் உடலும் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

2 பேரின் உடலும் திட்டானிமுட்டத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்தநிலையில் இருவரது வீட்டிற்கு சென்ற அமைச்சர் காமராஜ், அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். முதலாவதாக ரோகித்தின் வீட்டிற்கு சென்ற அமைச்சர் காமராஜ் மாணவனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது தாய் சித்தரவல்லி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பாலாஜியின் வீட்டிற்கு சென்ற அமைச்சர், அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து அவரது தாய் சுபத்திரா மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இளம்கன்று பயமறியாது என்பார்கள் அதுபோல் நீரில் குளித்து விளையாடச்சென்ற சிறுவர்கள் நீரின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவம் ஈடுசெய்ய முடியாதது. மறைந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு எனது சார்பிலும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற துயர சம்பவம் இனி எங்கும் நடக்கக்கூடாது என்பதே அனைவரின் விருப்பமாகும் என்றார். பேட்டியின் போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், கட்சி நிர்வாகிகள் செல்வராஜ், ஜெகநாதன் உள்பட பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்