தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-08-04 21:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

உதவித்தொகை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 9–ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200–ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300–ம், பிளஸ்–2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400–ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை மனுதாரரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

தகுதிகள்

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புகிறவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படாது. ஆனால் தொலைதூரக் கல்வி அல்லது தபால் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம்.

மேலும் ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித் தொகை பெற, வங்கி கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதிமொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளின் உதவித்தொகை நிறுத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600–ம், பிளஸ்–2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750–ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000–ம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 28–ந் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக பெறலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வழங்கப்படும். உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்