தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்படும் என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள கொளப்பலூர், காசிபாளையத்தில் அனைவருக்கும் வீடு கட்டுவதற்கான திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு கொளப்பலூரில் 112 பேருக்கும், காசிபாளையத்தில் 58 பயனாளிகளுக்கும் வீடு கட்டுவதற்கான உத்தரவை வழங்கினார்.
நிகழ்ச்சியின் முடிவில் நிருபர்களுக்கு அமைச்சர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கொளப்பலூர் பேரூராட்சியில் 112 பயனாளிகளுக்கு அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேரூராட்சியில் ரூ.1 கோடி செலவில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளன. மேலும், கல்லுமடை, அருவங்கொரை, குமரன்காலனி உள்பட பல பகுதிகளிலும் ரூ.5கோடி மதிப்பீட்டில் தார் சாலை விரைவில் அமைக்கப்படும்.
கொளப்பலூர், ஓடக்காட்டூர் நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கொளப்பலூர் அருகே டெக்ஸ்டைல் பார்க் அமைக்கப்படும். இதன் மூலம் 8 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்திக்கடவு–அவினாசி திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.1,789 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு ரூ.250 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
அளுக்குளி, நாதிபாளையம், அரக்கன்கோட்டை, கோசணம், அக்கரை கொடிவேரி ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 2 ஆயிரத்து 292 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்க பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 3 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும். 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 412 மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.