லாரி உரிமையாளர் தூக்குப்போட்டு சாவு: தற்கொலைக்கு தூண்டிய விவசாயி கைது

லாரி உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக விவசாயி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-08-04 22:00 GMT

ஈரோடு,

ஈரோடு சோலார் புதூர் நகராட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 38). இவர் 2 லாரிகள் சொந்தமாக வைத்து மணல் விற்பனை செய்து வந்தார். இவருடைய மனைவி சித்ரா (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தட்சிணாமூர்த்தி, கோணவாய்க்கால் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இந்த நிதி நிறுவனத்தை அதே பகுதியை சேர்ந்த ஜவஹர், சித்தீஸ்வரன், முருகன் ஆகியோர் நடத்தி வந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக மணல் தொழில் மந்தமானதால் அவரால் சரிவர வட்டி கட்ட முடியவில்லை. இதனால் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 2–ந் தேதி இரவு நிதி நிறுவன உரிமையாளர்கள் 3 பேரும், லக்காபுரத்தை சேர்ந்த விவசாயி ஜெகதீசன் (48) மற்றும் அவருடன் சில அடி ஆட்களை அனுப்பி வைத்து, தட்சிணாமூர்த்தியின் 2 லாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்று விட்டனர்.

இதனால் அவமானம் தாங்க முடியாமல் அன்று இரவே, சோலார் மணல் லாரி உரிமையாளர் சங்கத்திற்கு முன்பு உள்ள ஒரு வேப்பமரத்தில் தட்சிணாமூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நிதி நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் மற்றும் லாரி, மோட்டார்சைக்கிளை எடுத்துச்சென்ற ஜெகதீசன் ஆகியோர்தான் தட்சிணாமூர்த்தியை தற்கொலைக்கு தூண்டி உள்ளனர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஜெகதீசனை நேற்று கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக நிதி நிறுவன உரிமையாளர்கள் ஜவஹர், சித்தீஸ்வரன், முருகன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்