சிவகங்கை, இளையான்குடி பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை

சிவகங்கை, இளையான்குடி பகுதிகளில் மழையுடன் வீசிய சூறாவளி காற்றால் வாழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து சேதம் ஏற்பட்டது.

Update: 2018-08-04 21:30 GMT

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2 தினங்களாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள புதுவயல், சாக்கோட்டை, பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், சிவகங்கை, திருப்பத்தூர், இளையான்குடி, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் குறிப்பாக திருப்புவனத்தில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் 54 மி.மீ. மழை அங்கு பதிவாகியது. இதற்கிடையில் நேற்றும் மாவட்டத்தில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவகங்கை மற்றும் இளையான்குடி பகுதிகளில் மழையுடன், சூறாவளி காற்றும் வீசியது. இதனால் அப்பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இளையான்குடி அருகே கீழநெட்டூர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றில் 10–க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. மேலும் ஓட்டு வீடுகளில் ஓடுகள் உடைந்து விழுந்தன. இதில் வீட்டினுள் இருந்த 7 வயது சிறுவன் காயமடைந்தான்.

இதேபோல் சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் உள்ள மின்கம்பம் ஒன்று ஒடிந்து அந்தரத்தில் உயர் அழுத்த மின்கம்பியில் தொங்கியவாறு கிடந்தது. இதனால் அப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடன் மின்கம்ப பகுதியை கடந்து சென்றனர். பின்னர் மின்வாரிய துறையினர் அதனை சரிசெய்தனர். முன்னதாக மின்கம்பம், மரங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் இருளில் தவித்தனர்.

இளையான்குடி அருகே மேலநெட்டூர், ஆலம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மழையுடன் வீசிய சூறாவளி காற்றிற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. இதில் பல வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் வாழை மரங்களை காட்டி விவசாயிகள் பலரும் வியாபாரிகளிடம் முன்பணம் வாங்கியுள்ள நிலையில், மரங்கள் வேருடன் சாய்ந்ததால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்