முறையற்ற கைது நடவடிக்கையை கண்டித்து நிர்வாக அதிகாரிகள் 21-ந் தேதி முதல் தொடர் விடுப்பு போராட்டம்

இந்து சமய அறநிலையத்துறையில் நடைபெறும் முறையற்ற கைது நடவடிக்கையை கண்டித்து வருகிற 21-ந் தேதி முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் சங்க மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-08-04 22:45 GMT
திருச்சி,

தமிழ்நாடு திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அருள்செல்வன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஞானசேகரன், இணைச்செயலாளர்கள் நாகராஜன், சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சங்கத்தின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், இந்து சமய அறநிலையத்துறையில் நடைபெறும் முறையற்ற கைது நடவடிக்கையை கண்டித்தும் வருகிற 21-ந் தேதி முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவது, அதற்கு முன்னதாக அறநிலையத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து, அறநிலையத்துறை ஆணையரை சந்தித்துவிட்டு ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது, தமிழகம் முழுவதும் உள்ள 40 ஆயிரம் கோவில்களை வெறும் 400 செயல் அலுவலர்களை மட்டும் கொண்டு நிர்வகிக்க முடியாது என்று ஏற்கனவே அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக இந்த துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். செயல்அலுவலர்களை முதன்மை திருக்கோவில்களில் மட்டும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கக்கூடாது.

செயல்அலுவலர்கள் மீது தவிர்க்க முடியாத காரணங்களால் நடவடிக்கை எடுக்கும்போது, முறையான விதிமுறைகளை பின்பற்றி அவர்களுக்கு தகுந்த வாய்ப்பு வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையின் மீது பரப்பப்படும் அவதூறுகளை முறியடிக்கவும், இந்த துறையின் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் கள விளம்பரங்கள், துண்டு பிரசுரம் அச்சடித்தல், பேனர்களை வைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும். சிலைக்கடத்தல் தொடர்பாகவும், 7 ஆயிரம் போலி சிலைகள் மற்றும் உடைந்த சிலைகள் குறித்தும் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதன் உண்மைத்தன்மை சரியாக ஆராயப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பாரதராஜா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்