ஆதார் எண் முறை: ஆதாரமா? சேதாரமா?

இந்திய குடிமக்கள் ரேஷன் கார்டு, பான் கார்டு, வாகன ஓட்டுரிமை அட்டை, வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு என பல்வேறு வகையானவற்றை இந்திய குடிமகன் என்பதற்கு ஆதாரமாக இதுவரை பயன்படுத்தி வருகின்றனர்.

Update: 2018-08-04 06:19 GMT
சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடையாள எண்ணுடன் கூடிய ஆதார் அடையாள அட்டை இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட ஒன்று. தொடக்கத்திலிருந்தே இது குறித்து நிறைய சர்ச்சைகளும் கேள்விகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஆதாரில் கொடுக்கப்படும் விவரங்கள் பாதுகாப்பானது அல்ல, அதனை யார் வேண்டுமானாலும் தவறாக பயன்படுத்தி ஒருவரின் விவரங்களை பெற முடியும் என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்ந்து மறுக்கப்பட்டது.

இந்த விவாதங்களில் உச்சக்கட்டமாக சமீபத்தில் டிராய் (தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தன்னுடைய ஆதார் எண்ணை வெளியிட்டு, இதனைக்கொண்டு தனது விவரங்களை முடிந்தால் கண்டறியுங்கள் என்று ஒரு பகிரங்க சவாலை டுவிட்டரில் விடுத்திருந்தார்.

வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் வெளிநாட்டை சேர்ந்த சில ஹேக்கர்கள், அவருடைய தொலைபேசி எண், பிறந்த தேதி, முகவரி மற்றும் அவருடைய வங்கிக் கணக்கு எண் போன்ற சில தகவல்களை வெளியிட்டு இருந்தனர். ஆர்.எஸ்.சர்மாவின் வங்கி கணக்கில் ஒரு ரூபாய் பணமாக செலுத்தப்பட்டிருந்தது.

இது நடந்த அடுத்த நாள் அவருடைய மகளின் மின்னஞ்சல் முகவரிக்கு பணம் கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இந்தத் தகவல்கள் ஆதார் சர்வர் அல்லது ஆதார் டேட்டாபேஸ்சில்(தரவு தளம்) இருந்து பெறப்பட்டதா? என்பது ஒரு நீண்ட விவாதத்திற்கு உள்ளானது. தரப்பட்ட தகவல்கள் நேரடியாக ஆதார் டேட்டாபேஸ்சில் இருந்து பெற்றதற்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆனால் இந்த சம்பவம் ‘ஆதார் பாதுகாப்பானது’ என்கிற வாதத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது.

ஆதாரை கொண்டு அரசாங்கத் திட்டங்கள், பல்வேறு வகையான மானியங்கள், அரசு நிதி உதவித் திட்டங்கள் போன்றவற்றை சரியானவர்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்க முடியும். அதே வேளையில், ஆதார் அட்டைக் குறித்து எழுப்பப்படும் பெரும் சந்தேகம், சர்ச்சையெல்லாம் ஆதார் எண் பெறுவதற்காக ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறதா? என்பதே.

தனிநபர் சார்ந்த தகவல்களை கொண்டு என்ன செய்துவிட முடியும் என்பதற்கு உதாரணங்கள் உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தனிநபர் சார்ந்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டன என்றக் குற்றச்சாட்டு உண்டு. அதுமட்டுமின்றி, உலகமயமாக்கப்பட்ட சந்தைகளில் ஒரு பொருளை விற்பதற்கோ அல்லது ஒரு பொருளை வாங்க வைப்பதற்கும் தனிநபர் சார்ந்த தகவல்களை கொண்டு உளவியல் ரீதியாக நுகர்வோர் மன நிலையை மாற்றமுடியும்.

தனி மனிதனின் சிந்தனைத் திறனையும், அவனுடைய மன ஓட்டத்தையும் முழுமையாக கட்டுப்படுத்தி ஒரு செயற்கையான பிம்பத்திற்கு அவனை தள்ளி விடுவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உள்ளன என்பதுதான் உண்மை. தனிமனித தகவல்களின் ரகசியம் முழுமையாக பாதுகாக்கப்படுவதற்கு ஆதார் அமைப்பும், அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும்.

பல கோடி மக்களுக்கு ஆதார் எண் உருவாக்குவதற்கு தொழில்நுட்ப ரீதியில், மிகப்பெரிய அளவில் மென்பொருள்கள் தயாரிக்கப்படும் பொழுது அதில் சேமிக்கப்படும் தகவல் மற்றும் தரவுகளைப் பாதுகாப்பதற்குப் பல்வேறு வகையான நடைமுறைகள் உள்ளன. அதைப்போல மென்பொருளில் சேமிக்கப்படும் தகவல்கள் உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்துவதற்கும் பல்வேறு செயல்பாடுகள் உள்ளன.

ஆதார் எண் சார்ந்த தகவல்கள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பதை மக்களுக்கு முழுமையாக விளக்குவதற்கு ஆதார் அமைப்பும் அரசாங்கமும் பல்வேறு வகையான செய்திக்குறிப்புகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்த வகையான செய்திகளைப் படிக்கும் அதே நேரத்தில்தான் ஆதார் தகவல்கள் திருடப்பட்டு விட்டது என்பது போன்ற செய்திகளும் சேர்ந்து வெளிவருகின்றது. இந்த நிலை மாறுவதற்கு ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப முயற்சி தேவைப்படுகிறது.

ஆதார் போன்ற தகவல்களை சேமிப்பதற்கு உருவாக்கப்படும் மென்பொருட்களின் தரமும் தகுதியும் மிக உயர்ந்தபட்ச அளவில் நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்திட வேண்டும் என்பது அரசின் கடமை. இல்லையெனில், இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் குறிப்பாக இன்னும் முழுமையாக கல்வி பெறாதவர்கள் வாழும் சமூகத்தில், முதியோர் காப்பு நிதியோ, ஓய்வூதியமோ அரசு நிறுவனத்திலிருந்து ஒருவரின் வங்கிக்கணக்குக்கு அனுப்பப்படும்போது, அந்நபரின் ஆதார் எண்னைக்கொண்டு வேறொருவர் உலகில் எங்கோ ஒருப்பகுதியில் இருந்துக்கொண்டு அதனை தனது கணக்கில் மாற்றிக் கொள்ளும் அச்சமும் உள்ளது.

டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், அரசு ஆதார் விஷயத்தில் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது. ஆதார் மூலம் நன்மைகள் பல கிடைத்தாலும், அதனால் விளையும் தீமைகளை முற்றிலும் களைந்து மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்க வழிவகுக்க வேண்டும்.

ஆதார் மீதான அச்சத்தையும், சந்தேகத்தையும் மக்களிடம் இருந்து விலக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.

- கணபதி.ம, தொழில்நுட்ப வல்லுனர்

மேலும் செய்திகள்