ஊத்தங்கரை அருகே பயங்கரம்: பெண் அடித்துக்கொலை

ஊத்தங்கரை அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2018-08-04 04:24 GMT
ஊத்தங்கரை,

ஊத்தங்கரை அருகே பெண்ணை அடித்துக்கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கல்லாவி மேட்டுத்தெருவில் பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நேற்று ஒரு சாக்கு மூட்டை மிதந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது தொடர்பாக கல்லாவி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் போலீசார், ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி அந்த சாக்குமூட்டையை மேலே கொண்டு வந்தனர். அந்த சாக்கு மூட்டையை போலீசார் பிரித்து பார்த்த போது உள்ளே பலத்த காயத்துடன் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பிணம் இருந்தது.

போலீசாரின் விசாரணையில், அந்த பெண்ணை மர்ம நபர்கள் அடித்துக்கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி, பின்னர் கல்லை கட்டி கிணற்றில் வீசி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் பெண்ணின் உடல் ஆடையின்றி இருப்பதால் மர்ம நபர்கள் அவரை கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதைத் தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையுண்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்ற சம்பவம் கல்லாவி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்