பள்ளி மாணவிகள் சுற்றுலா சென்ற 4 பஸ்கள் மீது கல்வீச்சு
மார்த்தாண்டம் அருகே பள்ளி மாணவிகள் சுற்றுலா சென்ற 4 பஸ்கள் மீது கல்வீசியதால் கண்ணாடிகள் சேதமடைந்தன. மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குழித்துறை,
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நாகர்கோவிலில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 4 தனியார் பஸ்களில் கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் சுற்றுலா முடிந்து இரவு நாகர்கோவிலுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை-சிராயன்குழி சாலையில் 4 பஸ்கள் வரிசையாக வந்து கொண்டிருந்தன.
சிராயன்குழி சந்திப்பில் சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் முன்னால் சென்ற பஸ் மீது கல் வீசினர். இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. உடனே, டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அத்துடன் பின்னால் வந்த பஸ்களும் வரிசையாக நிறுத்தப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த கும்பல் மீதமுள்ள 3 பஸ்களிலும் கல்வீசி தாக்கி விட்டு தப்பி ஓடினர். இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. அதிர்ஷ்டவசமாக மாணவிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், திடீரென பஸ்கள் மீது கல்வீசியதால் மாணவிகளும், ஆசிரியர்களும் அச்சமடைந்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் மாணவிகளையும், ஆசிரியர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பஸ்கள் மீது கல்வீசி விட்டு தப்பிய மர்ம நபர்கள் யார்? கல்வீசியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி பார்வையிட முடிவு செய்துள்ளனர்.