வந்தவாசி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ் மர்ம நபருக்கு வலைவீச்சு
வந்தவாசி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகையை அபேஸ் செய்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வந்தவாசி,
வந்தவாசி தாலுகா வெடால் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, ஓய்வு பெற்ற வேளாண்மை உதவி அலுவலர் ஆவார். இவருடைய மனைவி செங்கனிஅம்மாள் (60). இவர் கடந்த 2-ந் தேதி மகள் ராஜேஸ்வரி (40), பேத்தி உமா (21) ஆகியோருடன் வந்தவாசியில் உள்ள நகைக்கடைக்கு சென்று தன்னுடைய 5 பவுன் தங்கசங்கிலிக்கு 5 கிராம் டாலர் வாங்கி அதில் மாட்டி, தனது கழுத்தில் போட்டுக் கொண்டார்.
பின்னர் மீண்டு்ம் ஊருக்குச் செல்ல வந்தவாசி பழைய பஸ்நிலையத்தில் இருந்து டவுன் பஸ்சில் புறப்பட்டனர். பஸ்சில் நின்று கொண்டு பயணம் செய்த செங்கனிஅம்மாளை பயணி ஒருவர் தனது சீட்டில் அமரும்படி கூறிவிட்டு எழுந்து நின்றுகொண்டார்.
5 பவுன் நகை அபேஸ்
அந்த சீட்டில் செங்கனிஅம்மாள் அமர்ந்து பயணம் செய்துள்ளார். தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக பஸ் நின்றது, அப்போது அவர் தான் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி இல்லாதது பார்த்து திடுக்கிட்டு, கூச்சல் போட்டார்.
இதுகுறித்து தெள்ளார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அழகுராணி, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் நகை குறித்து பஸ்சில் பயணம் செய்தவர்களிடம் விசாரணை செய்தனர். ஆனால் நகை கிடைக்க வில்லை. மர்ம நபர் ஒருவர் நகையை அபேஸ் செய்து சென்றது தெரிய வந்தது. பின்னர் பஸ் வெடால் கிராமத்திற்கு புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.