தஞ்சை பெரியகோவிலுக்கு வந்த பக்தர்களிடம் கையெழுத்து இயக்கம்
சிலைகடத்தல் வழக்கை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்க வலியுறுத்தி தஞ்சை பெரியகோவிலுக்கு வந்த பக்தர்களிடம் கையெழுத்து இயக்கத்தை இந்து மக்கள் கட்சி நடத்தியது.
தஞ்சாவூர்,
சிலை திருட்டு மற்றும் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நியமிக்கப்பட்டு தற்போது வரை பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை கண்டித்தும், தமிழக அரசு, மத்திய அரசு, கவர்னர் ஆகியோர் இதில் தலையிட்டு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலை திருட்டு மற்றும் தடுப்பு பிரிவு போலீஸ்துறை தொடர்ந்து செயல்படவும், கூடுதலாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பொன்மாணிக்கவேலை நியமனம் செய்ய வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் தஞ்சை பெரியகோவிலில் முன்பு நடத்தப்பட்டது.
மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ்போன்ஸ்லே தலைமையில் மாவட்ட செயலாளர் பாலகுமார், நகர செயலாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் தஞ்சை பெரியகோவிலுக்கு வந்த பக்தர்களிடம் படிவங்களில் கையெழுத்துக்களை பெற்றனர். இந்த கையெழுத்து படிவங்களை, வருகிற 8-ந்தேதி, ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும் போது சமர்ப்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.