காட்பாடியில் மொபட் மீது லாரி மோதல்; பெண் தலை நசுங்கி சாவு கணவர் கண் முன்பே பரிதாபம்
காட்பாடியில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கீழே விழுந்த பெண் லாரி டயரில் சிக்கி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.;
காட்பாடி,
காட்பாடி அருகே உள்ள செங்குட்டை சி.எம். ஜான்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 38). இவர் குடிநீர் கேன்களை வீடு, வீடாக வினியோகிக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தரணி (வயது 30). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
ராமலிங்கம் நேற்று காலை 11.30 மணியளவில் மனைவி மற்றும் குழந்தையுடன் மொபட்டில் வேலூர் நோக்கி வந்தார். சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் போடுவதற்காக ராமலிங்கம் மொபட்டை திருப்பினார்.
தலைநசுங்கி பலி
அப்போது, மொபட்டுக்கு பின்னால் சிமெண்டு ஏற்றி கொண்டு வேகமாக வந்த லாரியும், டீசல் போடுவதற்காக அதே பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்துக்கு திரும்பியது. எதிர்பாராத விதமாக லாரி முன்னால் சென்ற மொபட் மீது மோதி யது. இதில் ராமலிங்கமும், குழந்தையும் சாலையின் இடதுபக்கம் விழுந்து, லேசான காயம் அடைந்தனர்.
வலதுபுறம் விழுந்த தரணி, லாரியின் டயரில் சிக்கி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சில நிமிடங்களுக்கு முன்பு தன்னுடன் மொபட்டில் பயணம் செய்த மனைவி, தலைநசுங்கி உயிரிழந்ததை பார்த்து ராமலிங்கம் கதறி அழுதார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தரணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன், குழந்தை கண்முன்னே பெண் லாரி டயரில் சிக்கி தலைநசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.