புதிய போலீஸ் சூப்பிரண்டு பி.சரவணன் பதவி ஏற்பு
கடலூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பி.சரவணன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த விஜயகுமார் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் இடமாறுதலாகி சென்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு பதிலாக சென்னை மயிலாப்பூரில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த பி.சரவணன், கடலூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். ஆனால் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக துணைகமிஷனர் பி.சரவணன் இடமாறுதலாகி வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.
எனவே அவர் வரும் வரை மதுரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்மேனன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பி.சரவணன் நேற்று கடலூருக்கு வந்து பதவி ஏற்றுக்கொண்டார். அவரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் வேதரத்தினம், வீரராகவன், துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவபிரகாசம், ராமச்சந்திரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து கூறினார்கள்.
முன்னதாக புதிய போலீஸ் சூப்பிரண்டு பி.சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும். குற்றச்செயல்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையங்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் சந்திக்க நேரம் ஒதுக்கப்படும். நகரங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு பி.சரவணன் கூறினார்.