பழனியில் பரபரப்பு: வியாபாரி வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு
பழனியில், வியாபாரி வீட்டில் 15 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி,
பழனி தேவாங்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். பழனி காந்தி மார்க்கெட் பகுதியில் கடை வைத்துள்ளார். நேற்று இவர், தனது குடும்பத்தினருடன் ஆடிப்பெருக்கையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவில் இருந்த தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வீட்டில் நகை, பணம் தேடியபோது, பீரோவின் சாவி கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி பீரோவை திறந்த மர்ம நபர்கள், அதில் இருந்த நகை, பணத்தை திருடிக்கொண்டு பீரோவை மீண்டும் பூட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதற்கிடையே வீட்டுக்கு வந்த ராஜேந்திரன் குடும்பத்தினர் பின்பக்க கதவு திறந்த நிலையில் இருப்பதை பார்த்தனர். உடனே உள்ளே சென்று பீரோ உடைக்கப்பட்டுள்ளதா? என்று பார்த்தனர்.
ஆனால் பீரோ பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இருந்த போதிலும் பீரோவுக்குள் இருக்கும் நகை, பணம் பத்திரமாக உள்ளதா? என பார்ப்பதற்காக அவர்கள் பீரோவை திறந்து பார்த்தனர். அப்போது அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.3 ஆயிரம் ஆகியவை திருடு போனதையறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து நகர் போலீசில் அவர்கள் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பின்பக்க கதவு, பீரோ ஆகியவற்றில் பதிவான ரேகைகளை சேகரித்தனர். வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடு போனது குறித்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.