சென்னை வெளிவட்ட சாலைக்காக 22 ஆழ்துளை கிணறுகளை மூட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை வெளிவட்ட சாலைக்காக 22 ஆழ்துளை கிணறுகளை மூட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி,
தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சென்னை வெளி வட்ட சாலை திட்டம் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தச்சூர், பஞ்செட்டி, தாமரைப்பாக்கம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள்கோயில், மாமல்லபுரம் வரை 134 கிலோமீட்டர் தூரத்திற்கும் 100 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட அளவீடு பணி முடிந்த நிலையில் 2-ம் கட்டப்பணிகள் பஞ்செட்டியில் இருந்து திருவள்ளூர் வரை நில எடுப்பு அளவை பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சாலை பணிக்கு தேவையான அளவு நிலம் எடுப்பதற்கு அளவுப்பணி பஞ்செட்டியில் இருந்து நத்தம் மற்றும் தாங்கல்மேடு கிராமத்திற்கு இடையே செல்கிறது. இந்த இடத்தில் 300 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.
இதற்கு தேவையான தண்ணீர்் இரு கிராமங்களுக்கு இடையே 500 மீட்டர் தொலைவில் 22 ஆழ்துளை கிணறுகளை அமைத்து நிலத்தடி நீர் மூலம் விவசாயம் நடந்து வருகிறது. இதனை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் சென்னை வெளிவட்ட சாலைக்கு தேவை யான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் 22 ஆழ்துளை கிணறுகள் உள்ளது. ஆழ்துளை கிணறுகளை மூடி அந்த நிலத்தை கையகப்படுத்தினால் பாசன வசதி இல்லாமல் விவசாய தொழில் பாதிக்கப்படும். இதனால் விவசாயிகள், கூலிதொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இதனை தவிர்க்கும் வகையில் தச்சூர் பஞ்செட்டியில் இருந்து தாங்கல்மேடு கிராமத்திற்கு தெற்கு பகுதி வழியாக சாலை அமைப்பதற்கு விவசாய நிலத்தை எடுத்து அதன் வழியாக சாலை உருவாக்கலாம்.
சாலை அமைக்க விவசாய நிலத்தை அரசுக்கு அளிக்க நாங்கள் தயாராக உள்ள நிலையில் எங்களின் நீர்வள ஆதாரத்தை அழித்து சாலை அமைக்க கூடாது என்று கூறி பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.