தலைமை ஆசிரியரை மாற்றக்கூடாது முதன்மை கல்வி அலுவலகத்தில், அ.தி.மு.க.வினர் மனு

ஆர்.கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கூடாது எனக்கோரி அ.தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.

Update: 2018-08-03 21:43 GMT
திண்டுக்கல், 



குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.கோம்பையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை ஆசிரியராக மோகன்தாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் என்பவரையும், பெண் ஊழியர் ஒருவரையும் தவறாக சித்தரித்து கல்வித்துறைக்கு புகார் அனுப்பியதாக தெரிகிறது.

இதுகுறித்து, அருண் குமார் கொடுத்த புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், மோகன்தாசை மாற்றக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 31-ந்தேதி பள்ளியை திறக்கவிடாமல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அங்குவந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளியை திறந்துவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் விசாரணை நடத்தி வருகிறார். இந்தநிலையில், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 50 பேர் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர் நேர்முக உதவியாளர் (உயர்நிலைப்பள்ளி) கிருஷ்ணனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், சங்க பிரச்சினை காரணமாக முன்னாள் தலைமை ஆசிரியர் ஒருவரின் தூண்டுதலின்பேரில் மோகன்தாஸ் மீது சிலர் தவறாக குற்றம் சாட்டுகின்றனர். அவர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மனு கொடுக்க வந்த பெண் ஒருவர் தலைமை ஆசிரியர் மோகன்தாசை மாற்றினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்