பதவி ஆசைக்காக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்தது யார்? தேவேகவுடாவுக்கு எடியூரப்பா கேள்வி

பதவி ஆசைக்காக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்தது யார்? என்று தேவேகவுடாவுக்கு எடியூரப்பா கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2018-08-03 21:30 GMT

பெங்களூரு,

பதவி ஆசைக்காக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்தது யார்? என்று தேவேகவுடாவுக்கு எடியூரப்பா கேள்வி எழுப்பி உள்ளார்.

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

மக்களுக்கு நன்றாகவே தெரியும்

ஆட்சி அதிகாரம் பறிபோனதால் துவண்டுபோய் வடகர்நாடக தனி மாநில கோரிக்கையை நான் தூண்டிவிடுவதாக தேவேகவுடா சொல்கிறார். ஆட்சி அதிகாரத்திற்காக மாநிலத்தை உடைக்கும் அளவுக்கு கீழே இறங்கி போகும் நபர் நான் இல்லை. பதவி ஆசைக்காக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துக்கொண்டது யார் என்பது மாநில மக்களுக்கு நன்றாகவே தெரியும். நான் முதல்–மந்திரியாக இருந்தபோது வட கர்நாடகத்தில் செய்த வளர்ச்சி பணிகள் என்ன? என்று குமாரசாமி கேட்டார்.

இதன் மூலம் தனி மாநில கோரிக்கைக்கான வி‌ஷ விதையை குமாரசாமியே விதைத்தார் என்பது தேவேகவுடாவுக்கு தெரியவில்லையா?. குமாரசாமி சென்னப்பட்டணாவில் பேசும்போது, சாதி மற்றும் பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்களித்தீர்கள் என்று பேசினார். இதன்மூலம் தனிமாநில கோரிக்கைக்காக வடகர்நாடக மக்களை தூண்டிவிட்டதே முதல்–மந்திரி தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இதுபற்றி தேவேகவுடாவுக்கு எதுவும் தெரியவில்லையா?.

ஏன் எதுவும் பேசவில்லை

வட கர்நாடகத்தில் இருந்து மாநில அரசுக்கு எவ்வளவு வருவாய் வருகிறது என்று குமாரசாமி பேசினார். அதுபற்றி தேவேகவுடா ஏன் எதுவும் பேசவில்லை. வட கர்நாடகத்தில் அமைதி குலைய குமாரசாமி தான் காரணம். அவருக்கு அறிவுரை கூறுவதை விட்டுவிட்டு தேவேகவுடா, என் மீது குறை கூறுவது சரியல்ல. தேவேகவுடா பொறுப்பு இல்லாமல் பேசுவதை கைவிட்டு கர்நாடகம் உடையாமல் இருக்க தனது மகனுக்கு அறிவுரை கூற வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்