சென்னையில் பெண்கள் பாதுகாப்பு மையம் போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்
தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான மையம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை,
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பெண்கள் நலன் தொடர்பாக தகுந்த ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும் இந்த சிறப்பு பிரிவு செயல்படும். சென்னை ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் இந்த அமைப்பு செயல்படும்.
இதன் தொடக்க விழா நேற்று காலை சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நடந்தது. தமிழக அரசின் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட துறை முதன்மை செயலாளர் டாக்டர் மணிவாசன் பெண்கள் பாதுகாப்பு மைய அலுவலகத்தை திறந்து வைத்தார். தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்யநாதன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், குற்றப்புலனாய்வு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.அமரேஷ்பூஜாரி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி பெண்கள் பாதுகாப்பு மையத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் சாரங்கன், துணை போலீஸ் கமிஷனர்கள் மல்லிகா, செல்வநாகரத்தினம், சி.பி.சி.ஐ.டி.போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பெண்கள் தேவையான ஆலோசனைகளை 9498336002 என்ற செல்போன் எண்ணில் பேசி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.