தீரன் சின்னமலை வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பேட்டி

தீரன் சின்னமலை வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

Update: 2018-08-03 22:30 GMT

அறச்சலூர்,

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலை மணிமண்டபத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டு தீரன்சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதன்முதலாக கோரிக்கை வைத்தார். அதே கோரிக்கையை வலியுறுத்தி நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது பலமுறை சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். அதன்பிறகு அறச்சலூர் அருகே ஓடாநிலையில் தீரன் சின்னமலைக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது.

தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும்.

தமிழகம் சமூக நீதியின் பிறப்பிடமாகவும், அடித்தளமாகவும் உள்ளது. இதில் இட ஒதுக்கீடு முறையில் உள்ள கோளாறுகளை சரி செய்ய வேண்டும். ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுப்பு இட ஒதுக்கீடு முறையை தமிழகத்தில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொங்கு வேளாளர் இன மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

மேலும் செய்திகள்