புளியங்குடி அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி கைது

புளியங்குடி அருகே ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-08-03 21:00 GMT
புளியங்குடி, 

புளியங்குடி அருகே ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருமண ஆசை வார்த்தை

நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியை சேர்ந்தவர் ராமர் மகன் மாடசாமி (வயது 30). துணி இஸ்திரி செய்யும் தொழிலாளி.

இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனை பயன்படுத்திக் கொண்ட மாடசாமி, திருமண ஆசை வார்த்தை கூறி அடிக்கடி அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால் அவர் கர்ப்பம் அடைந்தார்.

குழந்தை பிறந்தது

இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண், மாடசாமியிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்து வந்துள்ளார்.

மேலும் அந்த பெண் கர்ப்பமானது வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியவில்லை.

இதற்கிடையே மாடசாமியும் தலைமறைவாகவே இருந்து வந்தார்.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு திடீரென வயிற்று வலி ஏற்படவே அவரை புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் இதுபற்றி விசாரிக்கும் போது, மாடசாமி ஆசை வார்த்தை கூறி தனது மகளை ஏமாற்றியது தெரியவந்தது.

தொழிலாளி கைது

இதுதொடர்பாக சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மகேசுவரி விசாரணை நடத்தி, தொழிலாளி மாடசாமியை கைது செய்தார்.

மேலும் செய்திகள்