மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; தச்சு தொழிலாளி பலி
முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தச்சு தொழிலாளி பலியானார். இதுதொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முத்துப்பேட்டை,
முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரத்தை சேர்ந்தசெல்வமணி (வயது 46), உப்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (35) ஆகிய 2 பேரும் தச்சு தொழிலாளிகள். நேற்று இருவரும் உதயமார்த்தாண்டபுரத்தில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை செல்வமணி ஓட்டியுள்ளார். அப்போது கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த 2 பேரையும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் 2 பேரையும் தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார்.
இதையடுத்து படுகாயம் அடைந்த செல்வமணி திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே காட்டுநாவல் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் மனோகரன் (45) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.