அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி: போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும் மதுரை ஐகோர்ட்டில், பெண் வழக்கு

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தது பற்றி போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் புதுக்கோட்டை பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Update: 2018-08-03 22:15 GMT

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கொப்பனாபட்டியை சேர்ந்த தேன்மொழி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

என்னுடைய தோழியின் மூலம் விழுப்புரம் கூந்தலூரை சேர்ந்த ஜீவா அறிமுகமானார். அவர் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் பெரிய பொறுப்பில் இருப்பதாகவும், எனக்கு மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாகவும் கூறினார். இதற்காக ரூ.3 லட்சம் தர வேண்டும் என்று கேட்டார். அவரது பேச்சை நம்பிய நான், கடந்த 2013–ம் ஆண்டில் முதல்கட்டமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தேன்.

பின்னர் அவ்வப்போது பல்வேறு வங்கி கணக்குகளில் பணம் போடச்சொன்னார். அதன்படி பல்வேறு தவணைகளில் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 950–ஐ வங்கி கணக்குகளில் செலுத்தினேன். மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 950 ரூபாயை பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்தார். என்னுடைய பணத்தை திருப்பி தர கேட்டால் மிரட்டல் விடுக்கிறார்.

வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்தது பற்றி அவர் மீது போலீசில் புகார் செய்தேன். பின்னர் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் மனு அளித்தேன். இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே எனது புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சிவலிங்கம் ஆஜரானார்.

முடிவில், இந்த வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்