தினக்கூலித் தொழிலாளர்கள் தான் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார்கள், ஆய்வில் தகவல்
தினக்கூலித் தொழிலாளர்கள் தான் அதிக அளவில் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.;
மதுரை,
தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், சேலம், வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மதுவினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடையே விரிவான ஆய்வு நடத்தியது. அதற்காக 15 கேள்விகளை கொண்ட வினாக்கள் மொத்தம் 3,500 பேரிடம் கேட்பட்டு அவர்களிடம் பதில் பெறப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் விவரம் வருமாறு:–
அன்றாட தினக்கூலித் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார்கள். தினமும் குடிப்பவர்களும் வாரம் இருமுறை குடிப்பவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். மற்ற போதைப் பொருட்களை விட அதிகம் பேர் மது குடிக்கிறார்கள். வேலையில்லாமல் இருப்பவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்கள் தங்கள் பெற்றோர், நண்பர்கள் மூலம் பணம் பெற்று மது அருந்துகிறார்கள் தந்தை மது குடிப்பதால் அவர்களது குடும்பத்தின் வருமான இழப்பு ஏற்பட்டு குழந்தைகள், படிப்பை பாதியில் நிறுத்துதலும் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படுகிறது. குடும்ப வன்முறை பெருகுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில் சில பரிந்துரைகளையும் மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ‘‘பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும். உடனடியாக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டாலும் கூட உடனடியாக பார்களை மூடவேண்டும். போதையால் பாதிக்கப்பட்டவர்களில் மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மறுவாழ்வு மையங்களாகவும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீடு போல மது விற்பனை செய்யும் அரசு மதுவினால் இறந்தவர்கள் குடும்பத்துக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மதுவினால் இறந்தவர்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும். மேலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பிலும் குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும்‘‘ என்று பரிந்துரைக்கப்பட்டுஉள்ளது.