நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா திரளான பெண்கள் பூஜை செய்து வழிபாடு
நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா நேற்று நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்து வழிபட்டனர்.
நெல்லை,
நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா நேற்று நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்து வழிபட்டனர்.
ஆடிப்பெருக்கு விழா
ஆடிமாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவில் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் நேற்று காலை கொண்டாடப்பட்டது.
அங்குள்ள படித்துறையில் பெண்கள் வாழை இலை விரித்து, அதில் மஞ்சள் பிள்ளையார் படைத்தனர். தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்ளிட்ட மங்களபொருட்கள் வைத்து தாமிரபரணி ஆற்றுக்கு படையலிட்டு பூஜை செய்தனர். அவற்றை வாழை இலையில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டனர்.
புதுமண தம்பதிகள்
பின்னர் தாமிரபரணி ஆற்றுக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனர். புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி புதிய ஆடைகளை அணிந்து கொண்டனர். மூத்த சுமங்கலி பெண்களிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்றனர். மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக்கொண்டனர்.
அதேபோல் திருமணம் ஆகாத இளம்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிற்றை கட்டிக்கொண்டனர். சுமங்கலி பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றிக்கொண்டனர். இதில் திரளான பெண்கள் கலந்து கெண்டனர்.
குற்றாலம்
குற்றாலம் மெயின் அருவிக்கரையில் ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி குற்றாலம் மெயின் அருவிக்கரையில் அகத்தியர் சிலைக்கும், அருவி நீர் வரும் பாறையில் உள்ள சிவலிங்கத்திற்கும் பூஜை செய்தனர். சந்தனம், குங்குமம், மஞ்சள் போன்றவற்றை நீரில் தெளித்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பெண்களுக்கு சட்டை துணி, வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம் போன்றவை வழங்கப்பட்டன. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.