தென்காசி அருகே மரத்தில் கார் மோதி ஒருவர் பலி குற்றாலம் வந்துவிட்டு ஊர் திரும்பியபோது பரிதாபம்

தென்காசி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-08-03 21:30 GMT

தென்காசி,

தென்காசி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். குற்றாலத்தில் நண்பர்களுடன் குளித்து விட்டு ஊர் திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்தது.

குற்றாலத்துக்கு வந்தார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வடக்கு புதுக்கிராமத்தை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 52). இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் காரில் குற்றாலத்துக்கு வந்தார். இரவில் அருவிகளில் குளித்துவிட்டு காரில் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் காரை ஓட்டினார். நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் தென்காசி அருகே உள்ள சிவராமபேட்டை பகுதியில் கார் சென்ற போது, ஒரு திருப்பத்தில் திடீரென நிலை தடுமாறி ரோட்டின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

பரிதாப சாவு

இந்த விபத்தில் காரின் முன் பகுதியில் இருந்த ஷாஜகான் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற யாருக்கும் காயம் இல்லை. இந்த விபத்து குறித்து இலத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்