களக்காட்டில் பரிதாபம் மண் ஏற்றி வந்த டிராக்டர் மோதி, பள்ளி மாணவி பலி பொதுமக்கள் சாலைமறியல்

களக்காட்டில் மண் ஏற்றி வந்த டிராக்டர் மோதி, பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள். இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-03 22:00 GMT

களக்காடு,

களக்காட்டில் மண் ஏற்றி வந்த டிராக்டர் மோதி, பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள். இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

டிராக்டர் மோதியது

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் பிலமோன். இவருடைய மனைவி தேவி. இவர்களுடைய மகன்கள் பென்னி (வயது 14), சியாம் (8), மகள் பெனிஷா (12). அவர்களில் பெனிஷா, களக்காட்டில் உள்ள கோமதி அருள்நெறி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று காலை வழக்கம்போல் பெனிஷா தனது சைக்கிளில் பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருந்தாள்.

களக்காடு புதுத்தெருவில் உள்ள ஆலமரம் அருகே சென்றபோது, எதிரே மண் ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த டிராக்டர், பெனிஷா மீது மோதியது.

பள்ளி மாணவி சாவு

இதில் பெனிஷா கீழே விழுந்து டிராக்டரின் சக்கரத்தில் சிக்கினாள். இதில் அவள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியை ஞான செல்வம் மற்றும் ஆசிரியைகள் விரைந்து வந்து பார்த்து கதறி அழுதனர். பின்னர் கண்ணீர் மலக் இதுபற்றி அவளது பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். இதனால் பெனிஷாவின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அவர்கள் தங்களது மகளின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதற்கிடையே, களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் பெனிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்ததும் டிராக்டரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். டிராக்டரில் பதிவு எண் ஏதும் இல்லை.

சாலை மறியல்

இச்சம்பவத்தை கண்டித்து மதியம் 12 மணியளவில் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் களக்காடு போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டிராக்டர் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டரை ஓட்டி வந்த, மாவடியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (27) என்பவரை கைது செய்தனர்.

பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை

இதற்கிடையே, நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல் முருகன், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் மதியத்துக்கு மேல் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

டிராக்டர் மோதி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்