இளையான்குடி பகுதியில் பலத்த காற்றுடன் மழை; வீடுகள் சேதம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்தது.

Update: 2018-08-03 22:00 GMT

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை முதலே வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் திடீரென பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கீழநெட்டூர் கிராமத்தில் 10–க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. மேலும் 10–க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வீடுகள் சேதமடைந்து விழுந்ததில் வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. மேலும் வீட்டு ஓடு விழுந்ததில் ஆறுமுகம் என்பவரது மகன் மதியரசனுக்கு (வயது 7) பலத்த காயம் ஏற்பட்டது. அவன் சிகிச்சைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

இதையடுத்து பரமக்குடியில் இருந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் வேரோடு சாய்ந்த மரங்களையும், வீட்டின் மேல் பகுதியில் விழுந்து கிடந்த மரங்களையும் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த கிராமத்தில் உள்ள ஒரு கோவில் கட்டிடம் மீது மரம் ஒன்று சாய்ந்தது. இதில் அந்த கோவில் கோபுரம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிவராணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்