ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பொது மேலாளர் ஆய்வு

ராமேசுவரத்தில் இருந்து புதிய ரெயில்கள் இயக்கும் திட்டம் எதுவும் இல்லை என அங்கு ஆய்வு செய்த தெற்கு ரெயில்வே பொது மேலாளர் கூறினார்.

Update: 2018-08-03 22:15 GMT

ராமேசுவரம்,

தெற்கு ரெயில்வே பொது மேலாளர் குல்சிரஸ்தா சென்னையில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக ராமேசுவரம் வந்தார். தொடர்ந்து ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறை, பெண் பயணிகளுக்கான காத்திருப்பு அறை, பிளாட்பாரங்கள், உணவகங்கள், டிக்கெட் வழங்குமிடம், ரெயில் நிலைய நுழைவு பகுதி உள்ளிட்ட பல பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் நீனுஇட்டிரேயா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

ரெயில்வே பொது மேலாளர் குல்சிரஸ்தா நிருபர்களிடம் கூறியதாவது;–

ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் விடுவது குறித்தோ மற்றும் புதிய ரெயில்கள் விடுவது குறித்த திட்டமோ இல்லை. பாம்பன் ரெயில்வே தூக்குப் பாலத்தில் புதிய தூக்குப்பாலமானது ரெயில்வே துறையோடு சேர்ந்த ஆர்.வி.என்.எல். மூலமாகவே கட்டப்படவுள்ளது. பாம்பன் ரெயில்வே பாலத்தில் புதிய தூக்குப்பாலம் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கும். இவ்வாறு கூறினார். முன்னதாக ராமேசுவரம் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.

ரெயில்வே பொது மேலாளரிடம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக செயலாளர் களஞ்சியம், துணை செயலாளர் பாலமுருகன் ஆகியோர் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ராமேசுவரத்தில் இருந்து வாரத்தில் ஒரு முறை இயக்கப்படும் திருப்பதி ரெயிலை தினமும் இயக்க வேண்டும், ராமேசுவரத்தில் இருந்து கோவை, பாலக்காடுக்கு தினமும் ரெயில் இயக்க வேண்டும், ராமேசுவரத்தில் இருந்து பகல் நேரத்தில் சென்னைக்கு ரெயில் இயக்க வேண்டும், ரெயில்நிலைய பிளாட்பாரங்கள் முழுவதும் மேற்கூரைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

பொது மேலாளர் ஆய்வு செய்ததையொட்டி இதுவரை இல்லாத அளவிற்கு ரெயில்வே நிலைய நுழைவு பகுதி, டிக்கெட் வழங்குமிடம், பிளாட்பாரங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் முழுமையாக சுத்தமாக இருந்தன. இதே போல எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்