குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவோருக்கு கடும் தண்டனை, நீதிபதி கயல்விழி பேச்சு
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி கூறியுள்ளார்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சைல்டுலைன் அமைப்பு சார்பில் உலக மனித கடத்தல் எதிர்ப்பு தினம் அழகன்குளத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ராமலிங்கம், வக்கீல்கள் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, செயலாளர் நம்புநாயகம், மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, குழந்தைகள் நலக்குழு தலைவர் சகுந்தலா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், சைல்டுலைன் திட்ட இயக்குனர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் நிகழ்ச்சியில் நீதிபதி கயல்விழி பேசியதாவது:–
குழந்தைகள் தற்போது பாலியல் தொழிலுக்கு கடத்தப்படுவதையும், கொத்தடிமைகளாக வேலை செய்ய வைப்பதையும் தடுக்க வேண்டும். குழந்தை தொழிலாளியை வேலைக்கு வைக்கும் நபர்கள் கடும் தண்டனைக்குள்ளாவார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கொலை குற்றங்களை விட மிக கடுமையாக பார்க்கப்படும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு ஆட்டோவில் அனுப்பும் போது சம்பந்தப்பட்ட ஆட்டோ குறித்து முழுவிவரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் அழகன்குளத்தில் நிலவும் சமூக நல்லிணக்கத்தை அவர் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் நாகசாந்தி, தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், வக்கீல் அசோகன், கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதபூபதி, அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபை தலைவர் லுக்குமான் ஹக்கீம், செயலாளர் அகமது பசீர், இந்து சமூக தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் முத்துரெத்தினம், ஊராட்சி செயலர் மால்முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.