பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் 50 பேர் கைது
சேலத்தில் பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக் கப்பட உள்ளது. இதற்கு விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பசுமை சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று முன்தினம் பசுமை சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முயன்றவர்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனை கண்டித்தும், பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரியும் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கைது
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், போலீசாரின் செயலை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். மேலும், பசுமை சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 6 பேர் பெண்கள் ஆவர். பின்னர் அவர்களை போலீசார் வேனில் ஏற்றி அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். பிறகு மாலையில் கைதான அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.