மின்சார ரெயிலில் டிக்கெட் இன்றி வந்த பயணி விட்டுச்சென்ற ஆடு ஏலம் விடப்பட்டது
மின்சார ரெயிலில் டிக்கெட் இன்றி வந்த பயணி விட்டுச்சென்ற ஆட்டை மத்திய ரெயில்வே ஏலத்தில் விட்டது. இதில், ரூ.2 ஆயிரத்து 500-க்கு அந்த ஆடு ஏலம் போனது.
மும்பை,
மின்சார ரெயிலில் டிக்கெட் இன்றி வந்த பயணி விட்டுச்சென்ற ஆட்டை மத்திய ரெயில்வே ஏலத்தில் விட்டது. இதில், ரூ.2 ஆயிரத்து 500-க்கு அந்த ஆடு ஏலம் போனது.
பயணி விட்டுச்சென்ற ஆடு
மும்பை மஜித் பந்தர் ரெயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் டிக்கெட் பரிசோதகர் ராம் என்பவர் பணியில் இருந்தார். அப்போது, பயணி ஒருவர் ஆட்டுடன் பிளாட்பாரத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். டிக்கெட் பரிசோதகர் அவரை மறித்து டிக்கெட்டை கேட்டார். அந்த பயணி சிறிது நேரம் டிக்கெட்டை பையில் இருந்து எடுப்பது போல பாவனை செய்தார்.
இந்தநிலையில் டிக்கெட் பரிசோதகர் மற்ற பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்ட நேரத்தில் ஆட்டுடன் வந்தவர் கூட்டநெரிசலை பயன்படுத்தி அங்கு இருந்து தப்பிச்சென்றார். உரிமையாளர் ஓடிவிட்ட நிலையில் ஆடு மட்டும் டிக்கெட் பரிசோதகர் அருகில் பரிதாபமாக நின்று கொண்டு இருந்தது.
ஏலத்தில் விடப்பட்டது
பயணி ஆட்டை விட்டுச்சென்றதால் டிக்கெட் பரிசோதகரும் செய்வது அறியாது திகைத்தார். பின்னர் அவர் ஆட்டை சி.எஸ்.எம்.டி.க்கு கொண்டு சென்றார். அங்குள்ள லக்கேஜ் அறையில் ஆடு பராமரிக்கப்பட்டு வந்தது. அந்த ஆட்டுக்கு ரெயில்வே ஊழியர்கள் ‘பசந்தி' என பெயர் வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து பயணி விட்டுச்சென்ற ஆட்டை ஏலத்தில் விட மத்திய ரெயில்வே முடிவு செய்தது.
இந்தநிலையில் அந்த ஆடு நேற்று ஏலத்தில் விடப்பட்டது. அப்துல் ரகுமான் என்பவர் ரூ.2 ஆயிரத்து 500-க்கு ஆட்டை ஏலத்தில் எடுத்தார்.