பெலகாவி கர்நாடக மாநிலத்தின் 2-வது தலைநகரா? மராட்டிய அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும் சிவசேனா வலியுறுத்தல்

பெலகாவியை கர்நாடகத்தின் 2-வது தலைநகராக உருவாக்குவோம் என்று அந்த மாநில முதல்-மந்திரி கூறிய நிலையில், மராட்டிய அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

Update: 2018-08-02 23:30 GMT
மும்பை, 

பெலகாவியை கர்நாடகத்தின் 2-வது தலைநகராக உருவாக்குவோம் என்று அந்த மாநில முதல்-மந்திரி கூறிய நிலையில், மராட்டிய அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

உரிமை கோரும் மராட்டியம்

கர்நாடக ஆளுகையில் உள்ள பெலகாவியை மராட்டியம் உரிமை கோரி வருகிறது. மராட்டியத்தின் கோரிக்கையை நீர்த்து போகச்செய்யும் பணிகளில் கர்நாடகம் ஈடுபட்டு வருகிறது. பெங்களூருவில் இருப்பதை போல பெலகாவியிலும் சட்டசபை கட்டிடத்தை கட்டியது. அங்கு குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த நேரங்களில் அங்கு தலைமை செயலக பணிகள் நடைபெறும்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் 2-வது தலைநகராக பெலகாவியை உருவாக்கும் வகையில் அங்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், பெங்களூருவில் உள்ள அரசு அலுவலகங்கள் பெலகாவிக்கு மாற்றப்படும் என்றும் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்தார்.

சிவசேனா கண்டனம்

குமாரசாமியின் இந்த கருத்துக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகம் மற்றும் மராட்டியம் இடையே பெலகாவி எல்லைப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும் போது கர்நாடக முதல்-மந்திரி இப்படி ஒரு அறிவிப்பை எப்படி வெளியிட முடியும். அவரது கருத்து, பெலகாவியை நமது மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் மராட்டிய மக்களின் காயத்தில் உப்பை தேய்த்து விடுவதாக உள்ளது.

இந்த பிரச்சினையை மராட்டிய அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். கர்நாடக அரசுக்கு கோர்ட்டு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டை மராட்டிய அரசு வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்